ஜ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையால் குழம்பியுள்ள அரசாங்கம்
வீரகேசரி வாரவெளியீடு 3/22/2009 6:31:32 PM - வன்னியில் நடைபெற்று வரும் போரில் அப்பாவிப் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட அறிக்கை, இலங்கை அரசாங்கத்தைப் பெரிதும் விசனமடையச் செய்துள்ளது. போரில் ஈடுபட்டிருக்கின்ற இரண்டு தரப்புகளுமே மனிதஉரிமைகளை மீறி வருவதாகவும் இது போர்க்குற்றங்களாகக் கருதப்படத்தக்கவை என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியிருந்தார். ஒருதலைப்பட்சமாக இலங்கை அரசின் மீதோ அல்லது விடுதலைப்புலிகள் மீதோ இந்த அறிக்கை குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இரண்டு தரப்பினதும் மனிதஉரிமை மீறல்களை அவர் கூட்டிக் காட்டி அறிக்கையிட்டிருந்தார். ஆனால் இலங்கை அரசாங்கமோ, இந்த அறிக்கை நவநீதம்பிள்ளை வேண்டுமென்றே வஞ்சம் தீர்ப்பதற்காகத் தயாரித்தது போன்ற தொனியில் கருத்துகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு முன்னர் ஐ.நா.வின் உயர் பிரதிநிதிகள், ஆணையாளர்கள் இலங்கைக்கு வந்து நிலைமையை நேரில் பார்வையிட்டு வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துகளுக்கு அரசாங்கம் எவ்வாறு பதிலளித்ததோ அதேபோன்ற பிரதிபலிப்பையே இப்போதும் வெளியிட்டிருக்கிறது. முன்னர் ஐ.நா.வின் ஆணையாளர் ஒருவர் சிறார்கள் படைச்சேர்ப்புக்கு இலங்கை அரசின் படைகள் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டை அடுத்து அவரைப் பயங்கரவாதி என்றார் அமைச்சர் ஒருவர். இன்னொரு சந்தர்ப்பத்தில் வேறொரு ஐ.நா.வின் உயர் மட்டப் பிரதிநிதியை புலிகளிடம் லஞ்சம் வாங்கியவர் என்று அரசாங்கத் தரப்பில் விசனம் தெரிவிக்கப்பட்டது. அரசாங்கத்துக்கு சார்பாக கருத்தை வெளியிடாத எந்தவொரு சர்வதேச, ஐ.நா. பிரதிநிதியும் இலங்கை அரசாங்கத்தில் இத்தகைய விமர்சனங்களில் இருந்து தப்பவில்லை. இலங்கை அரசாங்கத்தின் மீது குற்றமோ குறையோ கூறுகின்ற தரப்பினரை அவர் உள்நாட்டவராக இருந்தாலும் சரி, சர்வதேச சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி பயங்கரவாதி என்றோ, புலிகளின் அனுதாபி என்றோ பட்டம் கட்டுவது இலங்கை அரசாங்கத்தின் வழக்கமாகி விட்டது. இதேநிலை இப்போது ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் வந்திருக்கிறது. அவரையும் பயங்கரவாதத்துக்குத் துணை போகின்றவராகக் காட்டும் வகையில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்களும், சிரேஷ்ட அதிகாரிகளும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை வெளியான உடனேயே இலங்கை அரசாங்கம் அதை நிராகரித்தது. செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹன்ன இந்த அறிக்கை பக்கச் சார்பானதென்று குறிப்பிட்டார். "ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை புலிகளின் ஆதரவாளராக இருப்பார் என்று கருதவில்லை. அப்படியிருந்தால் அது பாரதூரமான விடயம். இந்த அறிக்கை புலிகளினதோ அல்லது அவர்களினது ஆதரவாளர்களினதோ நிர்ப்பந்தத்தின் பேரில் விடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதேவேளை மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும் "புலிகளின் அறிக்கையை ஒத்ததாகவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியாகியிருக்கிறது. புலிகளின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே அவர் அதிகளவு பொதுமக்கள் மரணமாகியிருப்பதாகக் கூறியிருக்கிறார். புலிகளின் போர்க்குற்ற நடவடிக்கைகளை இந்த அறிக்கையில் அவர் புறக்கணித்திருக்கிறார்.' என்றும் மஹிந்த சமரசிங்க குற்றம் சாட்டியிருந்தார். இதன்பின்னர் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவோ நேரடியாகவே நவநீதம்பிள்ளை மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். "விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்துக்கு ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை துணை நிற்கிறார். புலிகளுக்கு எதிரான யுத்த மீறல் குற்றச்சாட்டுகள் பற்றி உலகத்துக்கு தெரியப்படுத்த எவரும் முன்வருவதில்லை. ஆனால் அரசாங்கத்தின் மீது வீண்பழி போடப்படுகிறது. புலிகளின் அறிக்கையை ஒத்ததாகவே ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையும் வெளியாகியிருக்கிறது' என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் கருத்தை நியாயப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இன்னொரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையும் புலிகளின் இணையத்தள அறிக்கைகளும் பெரும்பாலும் ஒத்துப் போகின்றன. இந்த ஒன்றே சர்வதேச நிறுவனங்களில் புலிகள் ஊடுருவியிருப்பதாகச் சந்தேகிக்கப் போதுமான ஆதாரம். ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை இலங்கையின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்திருக்கிறது. இது ஐ.நா.வின் நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாகியிருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியிருக்கிறார். மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் குற்றச்சாட்டு தவறானது என்பதை நிரூபிக்காமல் அவரைப் பக்கச் சார்பானவராக புலிகளின் சார்பானவராக குற்றம் சாட்டும் வகையிலும், அவரது நேர்மையின் மீது கேள்வி எழுப்ப வைக்கும் அளவிலும்தான் நடந்து கொண்டிருக்கிறது. போரில் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறையாத நிலையில் அரசாங்கம் இயல்பாகவே இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும். இது இலங்கைக்கு மட்டும் பொருத்தியதாக இருக்காது. இலங்கை அரசாங்கத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கு முடியவில்லை. இந்த விவகாரத்தை சர்வதேச இராஜதந்திர நெறிமுறைகளினூடாகக் கையாளவும் அதற்குத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு என்பது சாதாரணமானதொன்றல்ல. இலங்கை அரசு ஏற்கனவே, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனது உறுப்புரிமையைக் கூட இழந்து போயிருக்கிறது. இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை புலிகளின் அறிக்கையோடு ஒப்பிட்டிருப்பதும் ஆணையாளரைப் புலிகளின் ஆதரவாளர் போன்று சித்திரிக்க முற்பட்டிருப்பதும் பலவீனமான இராஜதந்திர அணுகுமுறையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. இந்த இராஜதந்திரப் பலவீன நிலை இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்வரும் காலத்தில் மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கலாம்.
[www.virakesari.lk]
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment